மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்
உடுமலை: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வரை மாணவர்கள், இடைநிற்றல் இல்லாத கல்வி பெறுவதற்கு, ஆசிரியர்கள் இல்லம் தேடிச்சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத சதவீதத்தை விடவும், தேர்வுக்கு வராத மாணவர்களின் சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், தற்போது பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க, கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.பள்ளிக்கல்வி மேலாண்மை குழு கூட்டத்தில், பொதுத்தேர்வுக்கு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை, பெற்றோருடன் அழைத்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்வதற்கு, உரிய வழிகாட்டுதல் வழங்க சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உடுமலையில் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்கான சிறப்பு முகாம் நடத்துகின்றனர். உடுமலை, தொழிற்பயிற்சி நிலைய பேராசிரியர்களும் பங்கேற்று, மாணவர்களுக்கு தொழிற்கல்வி குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். மேலும், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஆலோசனை அளிக்கின்றனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:மாணவர்கள் படிக்க விரும்பினால் மட்டும் போதுமானது. அவர்களுக்கான வாய்ப்புகளை வழிகாட்டுவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். இதற்கு பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழல் மாணவர்களுடன் சேர்ந்து, பெற்றோரும் அவர்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கின்றனர். இதற்கு பொருளாதார பிரச்னைதான் முக்கிய காரணமாக உள்ளது.இவ்வாறு கூறினர்.