உள்ளூர் செய்திகள்

மாமல்லையில் சர்வதேச மாநாடு

மாமல்லபுரம்: கல்பாக்கம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், தோல்வி பகுப்பாய்வு சொசைட்டி - சென்னை பிரிவு, சென்னை, ஐ.ஐ.டி., மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து, கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாட்டை நேற்று முன்தினம் துவக்கின.இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்து, பொறியியல் சார்ந்த கூறுகளில், நம்பகத்தன்மை கட்டமைப்பை மதிப்பிட, இந்திய தர நிலைகள், குறியீடுகள் உருவாக்க வலியுறுத்தினார். மனிதரின் மைய நரம்பு உடற்கூறு அமைப்பை, கட்டமைப்பிற்கு ஒப்புமைப்படுத்தி விளக்கினார்.அறிவியல், தொழில் துறை, ஆராய்ச்சித் துறை செயலர் மற்றும் கவுன்சில் தலைமை இயக்குனர் கலைச்செல்வி, காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கினார். புவி வெப்பமடைவதால், இந்தியாவில் மின் உற்பத்தி நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், பிற தொழிலகங்களில் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதை விளக்கி, கார்பன் - டை - ஆக்சைடால் ஏற்படும் சிதைவை தவிர்க்க, புதிய வழிமுறையை உருவாக்க, மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.மாநாட்டு தலைவரான சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் எல்.டபிள்யூ.ஆர்., இன்ஜினியரிங் பிரிவு செயல் இயக்குனர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ உள்ளிட்டோர் பல்வேறு கட்டமைப்புகள் குறித்து பேசினர். இந்தியா மற்றும் பிற நாடுகளின் இயந்திர பொறியாளர்கள், மெட்டீரியல் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்கள் உள்ளிட்டோர் என, 250 பேர் பங்கேற்றனர்.அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, ரசாயனம், எண்ணெய் தொழிலகங்களின் கட்டமைப்புகள், இயக்க சாதனங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிட்டு உறுதிப்படுத்துவதில், தற்கால, வருங்கால முன்னேற்றம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்