மாமல்லையில் களைகட்டியது சுற்றுலா
மாமல்லபுரம்: பள்ளிகளுக்கு, டிச., 23 முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் தினமும் பெருமளவில் திரண்டனர்.விடுமுறை இறுதிநாள், ஆங்கில புத்தாண்டு நாளான நேற்று, காலையிலிருந்தே பயணியர் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்ப பகுதிகள் மற்றும் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.கைவினைப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் களைகட்டியது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன நெரிசலை தவிர்க்க, சுற்றுலா பேருந்து, வேன் ஆகியவை, பிரதான சாலைகள் வழியே செல்லவோ, நிறுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை, அணுசக்தி வளாக சாலை பகுதியில், அவை நிறுத்தப்பட்டன.கார், இருசக்கர வாகனம், பிரதான சாலைகள் வழியே சென்றன. அவையும் ஏராளமாக குவிந்ததால், கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை பகுதிகளில், வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.