குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்
பங்கார்பேட்டை: இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலம். அவர்கள் பிரகாசமாக திகழ வேண்டும். குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவது அனைவரின் பொறுப்பு என கோலார் மாவட்ட கல்வி அதிகாரி குருமூர்த்தி வலியுறுத்தினார்.பங்கார்பேட்டை மான்யதா இன்டர்நேஷனல் பள்ளியில் தாலுகா சட்ட சேவை பணிக்குழு, வக்கீல்கள் சங்கம், மான்யதா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நேற்று குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர்.விழாவை துவக்கி வைத்து அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகள், நாளைய இந்தியாவை உருவாக்குவர். அவர்களை,நாம் வளர்க்கும் விதம் தான், நாட்டின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும்.ஜவஹர்லால் நேரு போன்று குழந்தைகளின் எதிர்காலத்தை தட்டி எழுப்ப பெற்றோரும், ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலம். அவர்கள் பிரகாசமாக திகழ வேண்டும், என்றார்.இன்ஸ்பெக்டர் ராஜண்ணா பேசுகையில், நாட்டில் குழந்தை தொழிலாளர்கள், அதிகரித்து வருகின்றனர். குழந்தை கடத்தல் போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும். குழந்தை உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும்.குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் கட்டுப்பாடு மற்றும் தடை சட்டம், மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் உள்ளது, என்றார்.