படிக்கும்போதே வேலைக்கு தயாராகுங்கள்
ஆனால், அந்த சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு தேவையான தகுதியை வளர்த்துக்கொள்கிறார்களா என்பதே முக்கிய கேள்வி. இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் ஒருவர் தனக்கு தேவையான நல்ல வாய்ப்பை பெற, தெளிவான, சிறப்பான தகவல்தொடர்பு திறன், தன்னிடம் உள்ள விஷயத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் திறன், நல்ல ஆளுமைத்திறன் மற்றும் அவர் பணிபுரியபோகும் நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை அறிவை வைத்திருக்க வேண்டும். மேலும், நெட்வொர்க்கிங் திறமை, பேச்சுத்திறமை போன்றவையும் முக்கியம். இத்தகைய முன்தயாரிப்புகளோடு எப்போதுமே இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சுலபம். ஆனால் என்னதான் பல பெரிய கல்வி நிறுவனங்களில் படித்து வெளியே வந்தாலும், பல மாணவர்கள் பணி சூழல்களுக்கு தயாராக மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக ஒரு மேலாண்மை கல்வி நிறுவனத்தில், அத்துறை சம்பந்தமான படிப்புகளில், நிதி, மார்கெடிங் அல்லது எச்.ஆர்(மனிதவளம்) போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் எடுத்து கற்பிக்கப்படுகிறது. ஆனால் தொழில்முறை மற்றும் தொழிற்சாலை சூழல் போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் எடுக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்களின் படிப்பு காலத்தில், வரவிருக்கும் தங்களின் சமீபத்திய எதிர்கால சவாலை(நிறுவன பணி) பற்றி அதிகம் அக்கறை காட்டுவதில்லை. ஒரே இடத்தில் உடல் நோகாமல், அங்கே-இங்கே நகராமல் குளிர்சாதன அறையிலேயே அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற பழையகால மனோபாவமே பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறது. இதனால் வேலைதேடுதல் என்ற நிகழ்கால சூழலை மாணவர்கள் எதிர்கொள்கையில், பல சிரமங்களையும், சவால்களையும் சந்திக்க நேர்கிறது. இதுபோன்ற பணிசூழல் பற்றிய புரிதல் இல்லாத மாணவர்கள், நிறுவனங்களில் வேலை பெறும்போது, அவர்களுக்கு பணிசம்பந்தமாக பயிற்சியளிக்க அந்த நிறுவனங்கள், ஏராளமாக செலவழித்து பயிற்சியளிக்கின்றன. நிறுவனம் செலவழிப்பதைப் பற்றி நாம் இங்கு கவலைப்பட்டு சொல்ல வரவில்லை. முன்கூட்டியே அனைத்திற்கும் தயாராக இருப்பவர்கள், எளிதாக வேலை பெறுவதோடு, அதிக சம்பளத்தையும் பெற முடியும் என்பதையே இங்கு வலியுறுத்துகிறோம்.