உள்ளூர் செய்திகள்

சிரிப்புக்காக ஒரு பல்கலைக்கழகம்

உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே. இயந்திரத்தனமாகி விட்ட பரபரப்பான நகரத்து வாழ்க்கையில், மனிதன் சிரிப்பைத் தொலைத்துவிட்டு, காலில் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்துக்கொண்டிருக்கிறான். இதன் விளைவாக, காசுகொடுத்து சிரிப்பதற்கென்றே நகர்ப்புறங்களில் "லாப்டர் கிளப்புகள்' ஏராளமாக உருவாகத் தொடங்கியுள்ளன. காலை, மாலை நேரங்களில், நடை பயிற்சி செய்வது போல, இந்த கிளப் உறுப்பினர்கள் பூங்காக்களிலோ, கடற்கரையிலோ கூடி, செயற்கையான முறையில் கோரசாக சிரித்துக்கொண்டிருப்பார்கள். பெங்களூருவைச் சேர்ந்த மதன் கட்டாரியா என்ற "சிரிப்பு யோகா' நிபுணரும், சிரிப்பு கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். அவர், சற்று வித்தியாசமாக யோசித்து, தற்போது, சிரிப்புக்காக ஒரு பல்கலைக்கழகத்தை கட்டி வருகிறார். பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில், இந்த பல்கலைக்கழகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கு "ஹாஹா பல்கலைக்கழகம்' என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து மதன் கட்டாரியா கூறியதாவது: மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சிரிப்பு முக்கியமான ஒன்று. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய கோளாறுகள், மன அழுத்தம், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய தன்மை சிரிப்புக்கு உண்டு. பெங்களுருவில், நான் நடத்தி வரும் சிரிப்பு கிளப்பில் என்னிடம் ஏராளமானோர் "சிரிப்பு யோகா' பயின்று வருகின்றனர். பெங்களூருவில் மட்டும் 250 க்கும் மேற்பட்ட சிரிப்பு கிளப்புகள் உள்ளன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இதையே பெரிய அளவில், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செய்தால் என்ன என்று தோன்றியது. எனவே, இப்போது, சிரிப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்கி வருகிறேன். பெங்களூரு புறநகர்ப் பகுதியில், 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பல்கலைக்கழகத்தை கட்டி வருகிறேன். வகுப்பறைகள், கலையரங்கம், கான்பரன்ஸ் ஹால், பயிற்சி அறைகள், விடுதி வசதி உள்ளிட்ட அனைத்தும் இதில் உண்டு. தற்போது, 200 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் உருவாக்கி வருகிறேன். வரும் ஏப்ரல் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்க உள்ளன. பயிற்சிக் கட்டணம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். 18 மாதம் கொண்ட இந்த பயிற்சியை முடிப்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இதில், வயது வித்தியாசமில்லாமல் யார் வேண்டுமானாலும் சேர்ந்து, சந்தோஷத்தை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, அனைத்திந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தென் பிராந்தியத்திற்கான தலைவர் சாஹூ கூறுகையில், இது படிப்பு சாராத பல்கலைக்கழகம். எனவே, இதற்கு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்