உள்ளூர் செய்திகள்

அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: மருத்துவத்தை பின்பற்றி, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றி வந்த புதுச்சேரி அரசு பள்ளி, கடந்தாண்டு அதிரடியாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறியது. இதனால், மாணவர்கள் கடும் சிரமத்திற்கிடையே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.இதன் முடிவுகள் கடந்த 13ம் தேதி வெளியானது. அதில், அரசு பள்ளிகள் பிளஸ் 2வில் 86.27 சதவீதமும், 10ம் வகுப்பில் 81.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் நுழைந்த முதல் ஆண்டிலேயே, பலரின் விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. இதனை அரசு பெரும் சாதனையாகவே கருதுகிறது.அதே நேரத்தில் மாணவர்களின் மதிப்பெண்ணை பார்க்கையில் மிக குறைவாகவே உள்ளது. இதனால், தேர்ச்சி பெற்றதை கொண்டாட முடியாத நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளனர்.காரணம், இதே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோன்று, தனியார் பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுடன் உயர்கல்வி சேர்க்கையில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் மேலோங்கியுள்ளது.இந்த கடும் போட்டியை தவிர்த்திட, மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது போன்று, இன்ஜினியரிங், வேளாண், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்படிப்புகளுக்கும் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டை வரும் 2025-26 கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்கின்றனர்.கவர்னர், முதல்வருக்கு மனுசென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் மிக குறைவாக உள்ளது. அதனால், மாணவர்கள், விரும்பிய உயர்கல்வி படிப்பது மிக கடினமாக இருக்கும்.தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே, சென்டாக் மூலம் அரசு இட ஒதுக்கீட்டில் உயர் கல்வி படிக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே, அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி, இந்த ஆண்டு உயர்கல்வியில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் அனைத்து படிப்புகளிலும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்