அரசுப்பள்ளி மாணவர்கள் 1500 பேருக்கு நீட், ஜே.இ.இ., பயிற்சி
தேனி: மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் 1543 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற 'வெற்றி பள்ளிகள்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சனி தோறும் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் வட்டாரங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பிளஸ் 1 மாணவர்கள் 623 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 920 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 50 ஆசிரியர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.தேனி, கடமலை மயிலை, சின்னமனுார், உத்தமபாளையம் வட்டாரங்களில் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வட்டாரங்களில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம். அவர்கள் மூலம் அருகில் செயல்படும் பயிற்சி மையத்தில் அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றனர்.