மாநிலத்தில் 17வது இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த முறை, 21 வது இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம், நான்கு இடங்கள் முன்னேறி இம்முறை, 17வது இடம் பெற்றுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 588 மாணவர், 14 ஆயிரத்து, 871 மாணவியர் என, 29 ஆயிரத்து, 459 பேர் தேர்வெழுதினர். 13 ஆயிரத்து, 622 மாணவர்கள், 14 ஆயிரத்து, 317 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்களில், 966 பேரும், மாணவியரில், 554 பேரும் என, 1,520 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சி சதவீதம், 93.38; மாணவியர் தேர்ச்சி சதவீதம், 96.27. மொத்த தேர்ச்சி சதவீதம், 94.84 சதவீதம்.கூடுதல் தேர்ச்சிகடந்த முறை, 92.38 சதவீத தேர்ச்சியுடன், 21 வது இடம் பெற்றிருந்த திருப்பூர். இம்முறை, 2.46 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று, 94.84 சதவீதத்துடன், நான்கு இடங்கள் முன்னேறி, 17 வது இடம் பெற்றுள்ளது. திருப்பூரை விட, 0.01 சதவீதம் மட்டும் (அதாவது, 94.85 சதவீதம்) காஞ்சிபுரம், 16 வது இடத்தை பெற்றது.நடப்பாண்டு, மாணவர்களில், 966 பேரும், மாணவியரில், 554 பேரும் என, 1,520 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை, 781 குறைந்துள்ளது. இதனால், 2.46 சதவீத கூடுதல் தேர்ச்சி சாத்தியமாகியுள்ளது.கடந்த, 2019ல், 98.53 சதவீத தேர்ச்சியை திருப்பூர் பெற்றது. 2020 மற்றும், 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு நடக்கவில்லை. அனைவரும் 'ஆல்பாஸ்' செய்யப்பட்டனர். 2022ல், 93.93 சதவீதமும், 2023 ல், 92.38 சதவீதமும் பெற்ற திருப்பூர்.ஐந்து ஆண்டுகளுக்கு பின், 94 சதவீதத்தை (94.84) எட்டிபிடித்துள்ளது. கடந்த, 2014 ல், 94.38 சதவீத தேர்ச்சியை பெற்ற போது, ஏழாவது இடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு, 94.84 சதவீதம் பெற்ற போதும், 17 வது இடமே கிடைத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், முதல், பத்து இடங்களுக்குள் கிடைக்கும் என கல்வி அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், 17வது இடம் என்பதால், சற்று அப்செட்டாகினர். இருப்பினும், கடந்தாண்டை விட, நான்கு இடம் முன்னேறியுள்ளதே என திருப்தி அடைந்தனர்.அதிகமாக முயற்சியுங்கள்திருப்பூர் மாவட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரங்களை கலெக்டரிடம் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலெக்டர் அறைக்கு சென்றனர். தேர்ச்சி விவரங்களை பார்வையிட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், 17வது இடம்; நான்கு இடம் முன்னேறி இருக்கிறீர்களா? என கேட்டார்.முடிந்த வரை முயற்சித்தோம் சார் என மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒரே சேர பதில் சொல்ல, சரி முயற்சி வீண் போகவில்லை; இன்னமும் கொஞ்சமும் அதிகமாக முயற்சியுங்கள். அடுத்த முறை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றார்.