பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத வழிகாட்டணும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
கோவை : கோவை கல்வி மாவட்டத்தில், 623 மாணவர்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 259 மாணவர்களும் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுக்கான துணைத்தேர்வுகள், ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை நடைபெற உள்ளன.மாணவர்கள் மே 14 முதல் 29ம் தேதி வரை துணைத்தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.தோல்வியடைந்த மாணவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, விண்ணப்பிக்கும் செயல்முறை குறித்து வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில், பொதுத் தேர்வில் தோல்வியடைந்தோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.எனவே, தற்போதைக்கு சிறப்பு வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை.இதனிடையில், 3 அல்லது 4 பாடங்களில் தோல்வியடைந்த, சில மாணவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்க விருப்பம் காட்டாமல், 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர்.எனினும், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்த பின், தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும்படி அறிவுறுத்தப்படும். அவர்கள் வந்தால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.