தொல்லியல்: கி.மு. 2ம் நூற்றாண்டை சேர்ந்த சுடுமண் உறைகேணி கண்டுபிடிப்பு
கடலூர் அடுத்த கொண்டங்கி ஏரியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது சுடுமண்ணால் ஆன உறைகேணி இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த உறைகேணி 42 செ.மீ. உயரம், 54 செ.மீ. அகலம், 181 செ.மீ. சுற்றளவு கொண்டதாக உள்ளது. தகவலறிந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளரான சிவராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது: கொண்டங்கி ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகேணி கி.மு. 2ம் நூற்றாண்டின் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு உறைகேணி, கடற்கரை மணல் காணப்படுவதால் இப்பகுதி அக்காலத்தில் மக்கள் வாழிடமாகவும், அருகிலேயே கடற்கரை பகுதியும் இருந்திருக்கூடும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 75க்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்கால உறை கேணிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் 36 உறை கேணிகள் கண்டறியப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த உறை கேணிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு உள்ளது, கற்கால மக்கள் இப்பகுதிகளில் பரந்த அளவில் வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தும் சான்றுகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.