உள்ளூர் செய்திகள்

போலி பிளஸ் 2 சான்றிதழ் தயாரிப்பு; 8 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்த, பள்ளி கல்வித் துறை அலுவலர்கள் இருவருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் (டி.பி.ஐ.,) உள்ளது. 1998ம் ஆண்டு டி.பி.ஐ., அலுவலகத்தில் நிரப்பப்படாத 140 பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் திருடு போனது. அதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் பரமசிவம், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி பிரிவு போலீசார் விசாரித்தனர். டி.பி.ஐ., அலுவலர்கள் குமுதன், மூர்த்தி ஆகியோர், நிரப்பப்படாத பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை திருடிய வழக்கில் கைதாகினர். நிரப்பப்படாத பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, தமிழக அளவில் பிளஸ் 2 மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு விற்று ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்தனர். சென்னையில் கைதான அலுவலர்களிடம் போலி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை, ராசிபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் விமல்ராஜ் பெற்றார். அதனை வைத்து இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்து கவுன்சிலிங் சென்றார். விமல்ராஜ் கொடுத்தது, போலி சான்றிதழ் என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். மாணவர் விமல்ராஜ் கைது செய்யப்பட்டார். மூன்று பேரும் ஜாமீனில் உள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர கமிஷனர் சேகர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்  நியமத்துல்லா ஆகியோர் வழக்கு விசாரணையில் வேகம் காட்டினர். எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி சரோஜினிதேவி ஆகஸ்ட் 29ம் தேதி அளித்த தீர்ப்பில், ‘குமுதன், மூர்த்தி ஆகியோர் தனித்தனியாக எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் இருவரும் தலா ஆறாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மாணவர் விமல்ராஜ் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டார். தீர்ப்பு வழங்கப்படுவது முன்பே தெரிவிக்கப்பட்டதால், ஜாமீனில் இருந்த மூன்று பேரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தண்டனையை எதிர்த்து மேல் கோர்ட்டில், முறையீடு செய்ய தீர்ப்பில் அவகாசம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்