தகுதி அடிப்படையிலேயே 20 ஆயிரம் மாணவர்களுக்கு இன்ஜி., ‘சீட்’
அதேசமயம், எஸ்.சி., பிரிவில், 73.93 சதவீத இடங்களும், எஸ்.டி., பிரிவில், 32.04 சதவீத இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஜூலை 11ம் தேதி முதல் துவங்கிய பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் கடந்த 26ம் தேதியுடன் முடிவடைந்தது. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 41 ஆயிரத்து 240 பேர் வரவில்லை. 74 ஆயிரத்து 332 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொறியியல் கவுன்சிலிங்கில், ஓ.சி., பிரிவினருக்கு 31 சதவீதம், பி.சி., 23 சதவீதம், பி.சி., கிறிஸ்தவர், முஸ்லிம் 3.5 சதவீதம், எம்.பி.சி., 20 சதவீதம், எஸ்.சி., 18 சதவீதம், எஸ்.டி., 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இப்பிரிவுகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 852 மாணவர்கள், இடஒதுக்கீடுக்கான அவசியமின்றி தங்களது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே ஓ.சி., பிரிவில் இடங்களைப் பெற்றுள்ளனர். பி.சி., முஸ்லிம் பிரிவில் 703, பி.சி., கிறிஸ்தவர் பிரிவில் 1,534, பி.சி., பிரிவில் 15,113, எம்.பி.சி., பிரிவில் 2,337, எஸ்.சி., பிரிவில் 163, எஸ்.டி., பிரிவில் இரண்டு பேர் ஓ.சி., பிரிவிலேயே இடங்களைப் பெற்றுள்ளனர். முற்படுத்தப்பட்டோர் பிரிவில் 5,118 பேர் மட்டுமே ஓ.சி., பிரிவில் இடங்களைப் பெற்றுள்ளனர். மொத்தத்தில், ஓ.சி., பிரிவில் 24 ஆயிரத்து 970 பேர் சேர்ந்துள்ளனர். அதேபோல, எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 73.93 சதவீத இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 32.04 சதவீத இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஓ.சி., பிரிவில் 97.99 சதவீத இடங்களும், பி.சி., முஸ்லிம் பிரிவில் 85.5 சதவீத இடங்களும், பி.சி., கிறிஸ்தவர் பிரிவில் 90.85 சதவீத இடங்களும், பி.சி., பிரிவில் 93.9 சதவீத இடங்களும், எம்.பி.சி., பிரிவில் 92.12 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 82 ஆயிரத்து 358 இடங்களில், 90.20 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவில், 8,068 இடங்கள் காலியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது அதிகம். கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 56 ஆயிரத்து 41 இடங்கள் (84.2 சதவீதம்) மட்டுமே நிரப்பப்பட்டன.