உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரிகளில் 20 சதவீத கூடுதல் இடம் வேண்டும்

கோவை: அரசு கல்லுாரிகளில் வழக்கமாக அல்லாமல், 20 சதவீத கூடுதல் இடம் அதிகரிப்பு சார்ந்த அரசாணை முன்கூட்டியே வெளியிடவேண்டும் என, அரசு கல்லுாரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 171 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், தற்போது சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவு பெற்று பொது கலந்தாய்வு, 10ம் தேதி முதல் துவங்குகிறது.ஆண்டுதோறும், அரசு கல்லுாரிகளில் 20 சதவீத கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் சேர்க்கைக்குப்பின் அறிவிப்பு வெளியிடப்படுவதால், பல நிர்வாக சிக்கல்கள் எழுகின்றன. தகுதியுள்ள பல மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போவதாக அதிருப்தி எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு கல்லுாரி முதல்வர்ஒருவர் கூறுகையில், 20 சதவீத இடங்கள் அதிகரித்தல்தொடர்பாக, சேர்க்கைக்கு முன்பே அரசாணை வெளியிட்டால், பல மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.சேர்க்கை முடிந்த பின், இந்த அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் வருவதால், தகுதியுள்ள மாணவர்கள் இடம் கிடைக்காமல், வேறு தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து விடுகின்றனர்.அதன் பின் மாறி வருவதில், பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கல்லுாரிகளிலும், சேர்க்கை முடிந்த பின் வகுப்புகள் துவங்கி, மீண்டும் துறை மாறுதல் போன்ற நிர்வாக ரீதியாக சிக்கல் எழுகிறது.இதனால், மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டில், பொது கலந்தாய்வு முடிக்கும் முன், கூடுதல் சேர்க்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்