என்எம்எம்எஸ் தேர்வுக்கு 23 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: 2025-26 கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகைத் திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) 2026 ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வை எழுத தகுதியுடையவர்கள்.இந்தத் தேர்வு, மாநிலம் முழுவதும் வட்டார அளவில் நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 கட்டணத்தை இணைத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்யும் கடைசி தேதி டிசம்பர் 23-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.