அரசு பள்ளிகளில் திறன் திட்டம்; போதாது வேகம்.. ஆசிரியர் பற்றாக்குறை, பணிச்சுமை காரணமா?
கோவை: அரசுப் பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களின், அடிப்படை மொழி மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக, ரூ.19 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'திறன்' திட்டத்தில், மாணவர்களின் கற்றல் திறன், குறிப்பிட்ட சதவீதமே அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.குறைந்த சதவீதம் 6 முதல் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், மெல்லக் கற்கும் மாணவர்கள் தனியே பிரிக்கப்பட்டு, பள்ளி வேலை நேரத்தில் பிரத்யேகப் பயிற்சி வழங்கப்பட்டது.இவர்களுக்கென 'திறன் புத்தகம்' வழங்கப்பட்டு, அதிலிருந்தே காலாண்டுத் தேர்வு வினாக்களும் கேட்கப்பட்டன. தற்போது மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், குறைந்த சதவீதமே அதிகரித்துள்ளது.உதாரணமாக, 6ம் வகுப்பில், தமிழ் பாடத்தில் கோவையில் 62 சதவீதம், கிருஷ்ணகிரியில் 55 சதவீதம், சென்னையில் 59 சதவீதம் மற்றும் திருச்சியில் 37 சதவீதம் என்ற அளவில் மட்டுமே, திறன் முன்னேற்றம் காணப்படுகிறது.கணிதத் திறனிலும் இதே நிலை தொடர்கிறது. 7 மற்றும் 8ம் வகுப்புகளிலும் முன்னேற்றத்தின் சதவீதம், எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.என்ன காரணம்?சில அரசுப் பள்ளிகளில் இத்திட்டம், முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்பட்டதால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும், சுமார் 60 சதவீதப் பின்னடைவுக்கு, திறன் பயிற்சிக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லாதது; பள்ளிகளில் மன்றச் செயல்பாடுகள், போட்டிகள், மற்றும் அவற்றின் விவரங்களைப் பதிவேற்றுவது போன்ற கூடுதல் நிர்வாக பணிகள் காரணம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வலியுறுத்தல்'மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள், பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவதை, ஆவணங்கள் அடிப்படையில் மட்டும் ஆராயாமல், கள நிலவரத்தையும் ஒப்பிட்டு உறுதிப்படுத்த, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.