அமைச்சருக்காக 5 மணி நேரம் பசியுடன் பரிதவித்த மாணவர்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நுாற்றாண்டு அரங்கத்தில் நேற்று மதியம், 3:00 மணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் பங்கேற்றார்.அவர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி, விழா உரையாற்றுவதாக இருந்தது. இதற்காக பரிசு பெறும் அரசு பள்ளி மாணவர்கள், கலை நிகழ்ச்சிக்காக தயாரான மாணவர்கள், கல்லுாரி மாணவியர், நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் என, அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு, மதியம், 1:00 மணிக்கு வரவழைக்கப்பட்டனர்.அரங்கத்திற்கு இருந்த மாணவர்கள், அதிகாரிகள் அமர்வதற்கு, நாற்காலியை கஷ்டப்பட்டு துாக்கிச் சென்றனர். தொடர்ந்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் வராத சூழலில், விழாவுக்கு வந்த பலரும் சோர்வாக நாற்காலியில் அமர்ந்து பசி மயக்கத்தில் துாங்கினர்.பசி மயக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு, மாலை 5:00 மணிக்கு, தண்ணீர், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் சாவகாசமாக அங்கு வந்த அமைச்சர் செழியன், அவரச கதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கையோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.