விரிவுரையாளர் பணியிடங்கள் 50 சதவீதம் காலி: கல்வியின் பரிதாப நிலை!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி, ராஜ்யசபாவில் கூறியதாவது:ஊதிய உயர்வு தொடர்பாக, பல்கலை மானிய கமிஷன் நடத்திய ஆய்வில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 47 முக்கிய பல்கலைகளில், விரிவுரையாளர்களுக்கான 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தற்போதைய கல்வி ஆண்டுக்கு, 16 ஆயிரத்து 570 ஆசிரிய பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 8,515 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் மத்திய பல்கலைகளும் அடக்கம். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கு மட்டும் 317 விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலையில் 37 இடங்களும், டில்லி பல்கலையில் 79 இடங்களும் காலியாக உள்ளன. டில்லி பல்கலையில் 120 துணை பேராசிரியர்களுக்கான இடங்களும் காலியாக உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.