உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறந்து 6 மாதங்கள் கடந்தும் மாணவர்களுக்கு ஷூ வழங்காத அவலம்

பெங்களூரு: நடப்பு கல்வியாண்டு துவங்கி, ஆறு மாதங்கள் கடந்தும் பெங்களூரின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படவில்லை. செருப்பு அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாநில அரசு இலவச ஷூக்கள், சாக்ஸ் வழங்குகிறது. ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் முன்பே மாணவ, மாணவியருக்கு ஷூக்கள் வழங்கினால் உதவியாக இருக்கும். ஆனால் எந்த ஆண்டும், வகுப்பு துவங்குவதற்கு முன்பு, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்பட்டதில்லை.நடப்பு கல்வியாண்டு துவங்கும் முன்பே, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். ஆனால் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகள் திறந்து ஆறு மாதங்கள் கடந்தும், இதுவரை ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படவில்லை.சில மாணவர்கள் செருப்பு அணிந்தும்; சிலர் பழைய ஷூ, சாக்ஸ் அணிந்தும்; சிலர் வெறுங்காலுடனும் பள்ளிக்கு வருகின்றனர். அரசின் நிதியுதவி கிடைக்காததால், ஷூக்கள், சாக்ஸ் வழங்க முடியவில்லை. ஏழை மாணவர்கள், அரசு பள்ளிகளை நம்பியுள்ளனர். இவர்களுக்கு சரியான நேரத்தில், ஷூக்கள், சாக்ஸ் வழங்க முடியவில்லை என, ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதுவரை 50 சதவீதம் நிதி வந்துள்ளது. இதை வைத்து சில பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷூக்கள் வழங்கப்பட்டன. மீத தொகையும் விரைவில் வழங்கப்படும். இந்த தொகை பள்ளி மேம்பாட்டு கமிட்டி கணக்கில் செலுத்தப்படும். அதன்பின் ஷூக்கள் வாங்கி, மாணவர்களுக்கு வழங்குவோம்.ஒரு ஜோடி ஷூக்களும், இரண்டு ஜோடி சாக்ஸ்களும் வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 265 ரூபாய், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 295 ரூபாய், ஒன்பதாவது, பத்தாவது மாணவர்களுக்கு 325 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் பள்ளி மேம்பாட்டு கமிட்டி, ஷூக்கள், சாக்ஸ் வாங்கி வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அக்கறை இல்லா அரசு! பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ள அரசுக்கு, பள்ளி சிறார்களுக்கு சரியான நேரத்தில் ஷூக்கள் வழங்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. இது வளர்ச்சியின் அடையாளம் அல்ல; அலட்சியத்தின் வெளிப்பாடு என பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்