புதுமைப்பெண் திட்டத்தில் 6,569 மாணவியர் பயன்
காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவியருக்கு, சமூக நலத்துறை வாயிலாக, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் எனப்படும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் வாயிலாக, பள்ளி படிப்பை முடித்து, உயர் கல்வியில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வியில் சேர்ந்த, 2.73 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 6,569 மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கு மட்டும் இத்திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை வழங்கப்பட்டது.இந்நிலையில், 2024- 25ம் கல்வியாண்டு முதல், அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கும், உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.