உள்ளூர் செய்திகள்

கல்வி சேவையில் 73 ஆண்டுகளாக சிறந்து விளங்கும் பள்ளி

கடலுார்: குறிஞ்சிப்பாடியில் கடந்த, 1953ம் ஆண்டு ச.கு.வேலாயுதம் என்பவரால், 15 மாணவர்களுடன் ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்டது.70 ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க பள்ளி. கடலுார் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளியாகவும், தற்போது ஏ கிரேட் பள்ளி எனவும் பெயர் பெற்றுள்ளது. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1951 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.மாணவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படுகிறது. கல்வி உதவித்தொகை உடனுக்குடன் பெற்றுத்தரப்படுகிறது.மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளில் ஈடுபடுத்தி திறமைகளை வெளிக்கொணர தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், கணித மன்றம், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., ஸ்கவுட், என்.ஜி.சி., போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுகிறது.கலைக்கழகம் என்ற அமைப்பு இப்பள்ளியில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 54 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள், ஒரு கணினி ஆய்வகம் மற்றும் ஒரு புரோஜெக்டர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளன.மேலும் இப்பள்ளியில் பணியாற்றிய, 6 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். பள்ளி முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் போன்றோர் வருகை புரிந்துள்ளனர்.இப்பள்ளியை செயலர் அருண், வழி நடத்தி வருகிறார். பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.இப்பள்ளியில் படித்த பழனியாண்டி ஐ.ஏ.எஸ்., துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், கலெக்டராக பணியாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., சொரத்துார் ராஜேந்திரன், இப்பள்ளி மாணவர். இங்கு படித்த மாணவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்களாக உள்ளனர்.30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பள்ளியிலேயே பயின்று இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். உளவியல் சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள திறன்மிக்க உளவியல் ஆலோசகர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கலைக்கழக போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கிராமிய நடனப்பிரிவில் இரண்டாமிடம் பிடித்தமைக்காக, முன்னாள் மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுத் துறையில், கடலுார் மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்டத்தில் இப்பள்ளி அணி சிறந்து விளங்குகிறது. மாநில அளவில் கூடைப்பந்தாட்டத்தில் பரிசுகளை வென்றுள்ளது.கல்வி சேவையில் 73 ஆண்டுகள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எனது தாத்தா வேலாயுதம் கடந்த 1953ம் ஆண்டு இக்கல்வி நிலையத்தை துவங்கினார். அவரை தொடர்ந்து, எனது தந்தை செல்வராசு பள்ளி செயலராக பொறுப்பேற்று, 36 ஆண்டுகள் பள்ளியை சிறப்பாக வழி நடத்தினார். கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்ட இப்பள்ளி, 73 ஆண்டுகளாக சிறப்பான கல்வி சேவையை அளித்து வருகிறது. இப்பள்ளியில் பயின்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். நான் கடந்த 2024ம் ஆண்டு முதல் பள்ளி செயலராக பொறுப்பேற்று பள்ளிக் கல்விக் குழுத் தலைவராக பிரேமா செல்வராஜ் வழிகாட்டுதலுடன், பணிபுரிகிறேன். மாணவர் நலனை மனதில் கொண்டு பள்ளிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகிறேன். பாராம்பரிய மிக்க இப்பள்ளி எதிர்காலத்தில் மாநில அளவில் சிறந்து பள்ளியாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. - அருண், பள்ளி செயலர்.மாணவர் நலனில் அக்கறை இப்பள்ளியில் கடந்த, 18 ஆண்டுகளாக முதுகலை வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்தேன். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். இங்கு, கல்வியும், ஒழுக்கமும் இரு கண்களாக போற்றப்படுகிறது. மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு என்.சி.சி., மாணவர் கிஷோர் டில்லியில் நடந்த, துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். குறிப்பாக, விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர் கலையரசன், தேனியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். பள்ளியில் தேசிய மாணவர் படை, தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கம், இளஞ் செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் இப்பள்ளி மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. - அனந்தகுமார், தலைமை ஆசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்