மருத்துவ படிப்புகளுக்கான 85 இடத்திற்கு நவ., 25ல் கவுன்சிலிங்
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 85 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நவ.25ம் தேதி முதல் நடக்கிறது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உருவான காலியிடம் உட்பட ஏழு எம்.பி.பி.எஸ்., இடங்கள் மீதமுள்ளன. அதேபோல் 28 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன.இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட அன்னை மருத்துவ கல்லுாரிக்கு கூடுதலாக, 50 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ளது.இந்த, 50 இடங்கள் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள, 7 எம்.பி.பி.எஸ், 28 பி.டி.எஸ்., என, 85 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங், நவ. 25ம் தேதி முதல் டிச., 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.சிறப்பு கவுன்சிலிங்கில் ஏற்கனவே இடங்கள் பெற்றவர்கள் உட்பட விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.விபரங்களை, https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.