எச் 1 பி விசா விதிகள் கடுமையாகலாம்: நிபுணர்கள் கணிப்பு
புதுடில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்க உள்ள டிரம்ப்பின், அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கை காரணமாக எச்1 பி விசா விதிகள் கடுமையாக்கப்படலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதாக பிரசாரத்தின் போது இந்தியா மீது டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியிருந்தார்.இந்நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கையை அமல்படுத்த முனைந்தால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், பொறியாளர்கள் பெரிதும் பயன்பெற்று வந்த எச்1 பி விசாவிற்கான விதிகளை அவர் கடுமையாக்கலாம் எனக்கூறும் அவர்கள் இதனால் இந்தியர்களுக்கு அதிக செலவு ஏற்படும் எனவும், இதனால் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.இந்தியா - அமெரிக்கா இடையே 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.