உள்ளூர் செய்திகள்

ஜுன் 1ல் பாடபுத்தகங்கள் வழங்க நடவடிக்கை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சமச்சீர் பாட புத்தகங்களை ஜுன் 1-ந் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாநில கல்வி முறை, மெட்ரிகுலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, ஓரியண்டல் கல்வி முறை ஆகிய 4 வகை கல்வி முறைகள் இருந்தன. அந்த 4 வகையான கல்வி முறை ஒழிக்கப்பட்டு கடந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கல்வி திட்டத்திற்கான பாடபுத்தகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கில வழியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி முறை பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த பாட புத்தகங்களை பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்பே மாணவர்களின் கையில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய சமச்சீர் கல்வி முறை பாடபுத்தகங்களை பள்ளிக்கூடம் திறக்கும் ஜுன் 1ல் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வருகிற 1ம் தேதி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்