கல்லூரி 1; கேள்விகள் 5! அரசியலாகும் மாணவர்கள் வாழ்க்கை!
மாநகராட்சியின் அனுமதி பெறாமலேயே, அதற்குரிய இடத்தில் கல்லுாரி இயங்கி வருவது எப்படி; கட்டடம் கட்ட எம்.எல்.ஏ., குப்பன் பூஜை போட்டது எப்படி என, திருவொற்றியூர் கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள், சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர். திருவொற்றியூரில், பல ஆண்டுகளாக கல்லுாரி இல்லாததால், அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், பல கி.மீ., துாரம் பயணித்து, நகரின் பிற பகுதிகளில் உள்ள கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவஸ்தையோ அவஸ்தை இந்த நிலையில், சென்னை பல்கலையின் உறுப்புக் கல்லுாரியாக இயங்கும் விதமாக, கலை, அறிவியல் கல்லுாரி ஒன்றை, 2012ல் முதல்வர் துவக்கி வைத்தார். கல்லுாரியும், தற்காலிகமாக திருவொற்றியூர், தேரடி பூந்தோட்ட பள்ளி எனப்படும் சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் இயங்க துவங்கியது. அந்த பள்ளியில் மொத்தமே ஐந்து வகுப்பறைகள் தான் உள்ளன. அந்த ஐந்து அறைகளிலும் கல்லுாரி இயங்கியது. ஆனால், 750 மாணவர்களுக்கு அந்த ஐந்து அறைகள் எப்படி போதும்?அதனால், காலையில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், மதியத்திற்கு மேல் முதலாம் ஆண்டு மாணவர்கள் என, பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. இதில் தேர்வு எழுதும் போது, மரத்தடியில் மாணவர்கள் அமர வேண்டிய சூழலும் நிலவுகிறது. மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தற்போது, பள்ளி வளாகத்தில் உள்ள பால்வாடியில் அமர வைக்கப்படுவதால், அங்கு கடும் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. ஆரம்ப பள்ளிக்கு எதிரில், மாநகராட்சிக்கு சொந்தமாக, ஆண், பெண்களுக்கு என இரண்டு கழிப்பறைகள் உள்ளன. இரண்டிலும், இரு கழிப்பிடங்கள், ஒரு குளியலறை உள்ளன. அவற்றை, மைதானத்தில் விளையாடுவோர் பயன்படுத்துகின்றனர். வேறு வழியின்றி மாணவர்களும் அதைத் தான் பயன்படுத்துகின்றனர். கல்லுாரிக்கு என ஒரு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதை பேராசிரியர்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர். மற்ற நேரம் அது பூட்டப்பட்டு விடும். ரகசிய பூஜை கல்லுாரிக்கு, 7.25 கோடி ரூபாயில் கட்டடம் கட்டுவதற்காக, எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகரில், தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு (டாமின்) சொந்தமான 4.5 ஏக்கர் காலி நிலம், திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை மூலம், 2013ல் ஒதுக்கப்பட்டது. டாமின் அந்த நிலத்தை வங்கியில் வைத்து நிதி பெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை யில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த, 4ம் தேதி அதிகாலை, 5:00 மணியளவில், பூந்தோட்ட பள்ளி வளாகத்தில், கல்லுாரிக்கு கட்டடம் கட்டுவதற்கான பூஜை, ரகசியமாக நடந்தது. அதில், எம்.எல்.ஏ., குப்பன், கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி, பேராசிரியர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டனர். அன்று பிற்பகல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கேள்விகள் என்ன? இதுதொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவை:பூந்தோட்ட பள்ளி வளாகத்தில், விளையாட்டு மைதானம், ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம், ஓடுதளம் மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்லும் இடம், குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆகியவை உள்ளன. இவை அனைத்தும், 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளனகல்லுாரிக்கு, இந்த பரப்பளவு போதுமா? மேற்கண்ட அமைப்புகள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவற்றுக்கு மாற்று திட்டம் என்ன? அது ஏன் அறிவிக்கப்படவில்லை?கல்லுாரிக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக, மாணவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என, வாய்ப்பூட்டு போட்டிருப்பது ஏன்?கடந்த 2013ல், கல்லுாரிக்கு கட்டடம் கட்டக் கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இரு ஆண்டுகளாக துாங்கி விட்டு, இப்போது ஆட்சி முடியும் நேரத்தில், பூஜை போடுவது யாரை திருப்திப்படுத்த?மிகச் சரியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளன்று, அதிகாலையில், காதோடு காதாக, மிக ரகசியமாக பூஜை போடப்பட்டது ஏன்?கல்லுாரி துவங்கியதில் இருந்து, சமீபத்தில் பூஜை போட்டது வரை, அந்த இடம் தொடர்பாக மாநகராட்சியிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. மாநகராட்சியின் அனுமதி பெறாமல், அதற்குரிய இடத்தில் கல்லுாரி செயல்பட யார் அனுமதித்தனர்? கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார்? இதுகுறித்து மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு தகவல் தெரியுமா?இவ்வாறு, மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். வரும் கல்வியாண்டில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த கல்லுாரியில் சேர உள்ள நிலையில், அவர்களுக்காவது, அடிப்படை வசதிகள் முதல், கட்டடம் வரை அனைத்தும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவொற்றியூர் பகுதிவாசிகள், இந்த பிரச்னையை தேர்தல் பிரச்னையாக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்பது கூடுதல் செய்தி.