12 மாதமும் சம்பளம் வேண்டும் விரிவுரையாளர்கள் கோரிக்கை
சென்னை: கவுரவ விரிவுரையாளர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு ஆண்டும், 12 மாதமும் சம்பளம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை, அறிவியல் மற்றும் ஏழு கல்வியியல் கல்லுாரிகளில், 7,360 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு மாதம், 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக, 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத சம்பளம் ஆகஸ்டில் தான் வழங்கப்படுகிறது. மே மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை.இதுகுறித்து, தமிழக அரசு கலைக்கல்லுாரி யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிவகுமார் கூறியதாவது:நாங்கள், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாகவே உள்ளோம். மே மாதம் மாணவர் சேர்க்கை, தேர்வு கண்காணிப்பு மற்றும் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி போன்றவற்றில் ஈடுபடுகிறோம்.ஆனாலும், மே மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. மே மாதத்துக்கான சம்பளம் இல்லாததால், குழந்தைகளின் பள்ளி செலவுகள், குடும்பசெலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கவுரவ விரிவுரையாளர்கள் அனைவருக்கும், 12 மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். அத்துடன், ஏப்ரல் மாத சம்பளத்தை மே மாதமே வழங்க வேண்டும். பணியின்போது இறந்த விரிவுரையாளர்களின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.