இன்று 14 மையங்களில்... நீட் தேர்வு! அனைத்து ஏற்பாடுகள் தயார்
கோவை: கோவை, மாவட்டத்தில், 14 மையங்களில், 6,967 மாணவர்கள் இன்று நடக்கும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது. பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை இத்தேர்வு நடக்க உள்ளது. இத்துடன், 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம், 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இன்று நடக்க உள்ள தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில், 14 மையங்களில் தேர்வு நடக்க உள்ளது.கோவையில், எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, நேஷனல் மாடல் பள்ளி, ஆர்.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரி, ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, என்.ஜி.பி., பள்ளி, கோவை பப்ளிக் பள்ளி, வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி, கிக்கானி வித்யா மந்திர், விவேகம் பள்ளி, சுகுணா பிப் பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கிறது.கோவை மாவட்டத்தில், இத்தேர்வை, 6,967 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வுகள் சிறப்பான முறையில் நடக்க, தடையில்லா மின்சாரம், மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் இம்முறையும் பின்பற்றப்படும் என, தேர்வை நடத்தும் என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.