வரும் 18 முதல் தொடர் போராட்டம்; அரசு டாக்டர்கள் அறிவிப்பு
சென்னை: அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, வரும், 18ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தெரிவித்துள்ளது.அச்சங்கத்தின் தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதார துறையில், தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்தாலும், அரசு டாக்டர்களின் பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லை. அதிக பணிச்சுமை, சிரமங்கள், பல்வேறு சவால்களுடன் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.இளைய டாக்டர்கள் உயிரிழப்பு அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. டாக்டர்களுக்கு தரப்படும் ஊதியம், மற்ற மாநிலங்களை விட, 40,000 ரூபாய் குறைவாக உள்ளது.எனவே, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.வரும், 18ம் தேதி, முதல்வர், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டமும், 19ம் தேதி மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும்.மேலும், சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.