19 உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி
கோவை: கோவை கல்வி மாவட்டத்தில், 19 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் இதுவரை கிடைக்காததால் அவதிக்கு ஆளாகிவருகின்றனர்.கோவை மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மாதந்தோறும், 31ம் தேதி ஊதியம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், வீட்டு வாடகைப்படி மானியம் கிடைக்காததால், சம்பள பட்டியல் தராமல் நிறுத்தப்பட்டது. கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தால் நிதி நெருக்கடியை சந்திப்பதாக ஆசிரியர்கள், ஊழியர்கள் குமுறினர்.இதையடுத்து, நேற்று முன்தினம், 75 சதவீதம் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதர, 25 சதவீதம் பள்ளிகளின் ஆசிரியர்கள் இதுவரை சம்பளம் கிடைக்காது அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், இதுவரை கோவை கல்வி மாவட்டத்தில், 19 பள்ளிகளில் பணிபுரியும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. வீட்டு வாடகைப்படி மானியம் கிடைக்காத நிலையில் முழுமையான சம்பள பட்டியலை கல்வி அதிகாரிகள் அனுப்பவில்லை. 65 பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று சம்பளம் கிடைத்து விட்டது.மீதமுள்ளவர்களுக்கு விரைந்து சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைத்துவிட்டது என்றனர்.மாவட்ட கல்வி அலுவலர் கோமதியிடம்(இடைநிலை) பேச மொபைல் போனில் பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.