2024-25ம் கல்வியாண்டில் எம்.பில்., படிப்புகள் நிறுத்தம்: பாரதியார் பல்கலை
கோவை: பாரதியார் பல்கலையின் கீழ், 2024-25ம் கல்வியாண்டு முதல், எம்.பில்., ஆராய்ச்சி படிப்புகளுக்கான சேர்க்கை, முழுமையாக நிறுத்தப்படுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எச்டி., தரநிர்ணயம் மற்றும் விதிமுறைகள் 2022 நவ., அறிவிப்பின் படி, எம்.பில்., படிப்புகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சில பல்கலைகள் சிறப்பு அனுமதி பெற்று சேர்க்கை நடத்தின.இந்நிலையில், 2023 டிச., மூன்றாம் வாரம், எம்.பில்., படிப்புக்கு பல்கலை, கல்லுாரிகள் 2023-24ம் ஆண்டுக்கான சேர்க்கை புரிவதை, உடனடியாக நிறுத்த யு.ஜி.சி., அறிவிப்பை வெளியிட்டது. மேலும், பல்கலை மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின் பெறப்படும், எம்.பில்., பட்டம், அங்கீகாரம் இல்லாததாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.பாரதியார் பல்கலை உட்பட, சில மாநில பல்கலைகளில் 2023 நவ., மாதமே 2023-24ம் ஆண்டுக்கான எம்.பில்., சேர்க்கை முடிக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலையில் இருந்து, எம்.பில்., படிப்பு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா கூறுகையில், பாரதியார் பல்கலையின் கீழ், 2024-25ம் கல்வியாண்டு முதல், எம்.பில்., சேர்க்கை இல்லை என முடிவு செய்யப்பட்டு, சேர்க்கை நடத்தக்கூடாது என, கல்லுாரிகளுக்கு நேற்று முன் தினம் அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு முன்பு வரை சேர்க்கை புரிந்த மாணவர்களுக்கு, எவ்வித சிக்கல்களும் இருக்காது, என்றார்.