2047 ல் இந்தியா முதன்மை பொருளாதார மையமாக மாறும்
சிவகாசி: 2047 ல் நாம் முதன்மை பொருளாதார மையமாக மாறும், என சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் 40 வது கல்லுாரி ஆண்டு விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர், சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.விழாவில் கல்லுாரி நிர்வாக குழு தலைவர் ராமமூர்த்தி, தாளாளர் டென்சிங், செயலாளர் சிங்காரவேல், இணைச் செயலாளர் குணசிங் பிரித்திவிராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர், சதீஷ் ரெட்டி பேசுகையில், நமது நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் நம்மை ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளன. இவை அனைத்திற்கும் அறிவியல், தொழில்நுட்பத்தில் நமது ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளே காரணம்.கடந்த காலங்களில் ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்களில் 80 சதவீதம் பேர் வரை வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றனர். தற்போது அதே சதவீதம் மாணவர்கள் நமது நாட்டிலேயே வேலையில் அமர்ந்து சாதனைகள் புரிகின்றனர். தற்போது இந்தியா ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது. நல்ல கூட்டு முயற்சி தக்க சூழ்நிலை தேவையான உதவிகள் தற்போது கிடைத்ததன் மூலம் உறுதியாக 2047 ல் நாம் முதன்மை பொருளாதார மையமாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கல்வி சார் இணை கல்வி சார் கூடுதல் கல்வி சார் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற துறைகள், ஆய்வு கட்டுரைகள் வெளியீடு செய்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.