சந்திரயான்-3 வெற்றி: ஆழ்கடலில் சிறப்பிப்பு
சென்னை: காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர், சென்னை மற்றும் புதுச்சேரியில், டெம்பிள் அட்வென்ச்சர் எனும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கடலில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் சேவையாற்றி வரும் இவர், தேசப்பற்றுடன் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, ஆழ்கடலில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் சந்திரயான்- 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது. இதை பாராட்டும் வகையில் அரவிந் தருண்ஸ்ரீ, 10 கிலோவில் விக்ரம் லேண்டர் மாதிரி ஒன்று தயாரித்தார்.அதை தேசிய கொடியுடன் கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை பகுதி கடலில், 45 அடி ஆழத்தில் நேற்று கொண்டு சென்றார். அவருடன் ஜான், நிஸ்விக், கீர்த்தனா, தாரகை, ஆராதனா உள்ளிட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.