நவ., 3ல் துவங்குது புத்தாக்க மாநாடு
சென்னை: சென்னை பள்ளிக் கரணையில் உள்ள தேசிய கடல் வள தொழில்நுட்பக் கழகத்தில், 'நீலப் பொருளாதாரம்' எனும் தலைப்பில், புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு நவ., 3 முதல் 5ம் தேதி வரை நடக்கவுள்ளது.'வளர்ச்சியடைந்த இந்தியா - 2047க்கான கற்பனை, புத்தாக்கம், ஊக்கம்' எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடக்கவுள்ளது. பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, கடல்சார் சுகாதாரம் ஆகியவற்றில், கடல்சார் வளங்களின் பங்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.நாடு முழுதும் இருந்து நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், தொழில் துறை பங்குதாரர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இம்மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வு, தொழில்நுட்ப கழகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது.இதில், தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறுகையில், ''எதிர்காலத்தில் நீடித்த வளர்ச்சிக்கு, நீலப்பொருளாதாரம் மிக முக்கியமானது. ஆழ்கடல் இயக்கம், புத்தாக்கம், அறிவியலை முதன்மைப்படுத்தும் முன்முயற்சிகள் மூலம், கடல்சார் ஆராய்ச்சியில் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது,'' என்றார்.