கலைஞர்கள் 30 பேருக்கு விருது
சென்னை: சென்னை கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக, சிறந்த கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பல்துறை கலைஞர்கள் 30 பேருக்கு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நேற்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.இதில், 65 வயதிற்கு மேற்பட்டோருக்கான கலை முதுமணி விருதுடன், 20,000 ரூபாய்க்கான காசோலையை, நாடகத்துறை சித்தன், குரலிசை ராதா, ஓவியம் ஜெயசந்தர் மற்றும் லோககுரு, தமிழிசை வேதமூர்த்தி, நாதஸ்வரம் சுந்தரம் ஆகியோர் பெற்றனர்.அதேபோல், 51 - 65 வயதினருக்கான கலை நன்மணி விருதும், 15,000 ரூபாய்க்கான காசோலையும், நாட்டிய ஆசிரியர் அரவிந்தன், தவில் சேதுராமன், நாதஸ்வரம் ரகுராமன், மிருதங்கம் ஹிரிஹரன், பரதநாட்டிய மிருதங்கம் முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.இதேபோல், 36 - 50 வயதினருக்கான கலைச் சுடர்மணி மற்றும் 19 - 35 வயதினருக்கான கலை வளர்மணி மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கலை இளமணி விருதுகள், தலா ஆறு பேருக்கு வழங்கப்பட்டன.தவிர, இளம் கலைஞர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 15 பேருக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன், தமிழக அரசின் இசைக்கல்லுாரி முதல்வர் சாய்ராம் உடனிருந்தனர்.