காளையார்கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேச்சாத்தக்குடி அருகே 400 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல்லை, காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தி.பாலசுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:திருவாழிக்கல் என்பது வைஷ்ணவ கோவில்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களின் எல்லையை வரையறுக்கும் கல். இக்கல்லில் திருமாலின் அடையாளமான சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.நிலத்தின் நான்கு பக்கங்களிலும் இத்திருவாழிக்கல் நடப்பட்டிருக்கும். நான்கு பக்கங்களும் திருவாழி முத்திரை செதுக்கியிருப்பது தமிழகத்தில் அரிதான விஷயம். பேச்சாத்தக்குடி - பொன்னாங்குளம் இடையே உள்ள கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட கல்லில், நான்கு பக்கமும் திருவாழி முத்திரை கொண்ட கல் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளன.நான்கு திசைகளிலும் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை கோவிலுக்கு தானமாக வழங்குவது மரபு. அப்படி வழங்கும் போது சைவ கோவில்களுக்கு வழங்கும் நிலங்களை தேவதானம் என்றும், வைஷ்ணவ கோவில்களுக்கு வழங்கும் நிலங்களை திருவாழிக்கல் திருவிடையாட்டம் என்றும் குறிப்பிடுவர். பொதுவாக நிலம் தானத்திற்கு சைவ கோவில்களுக்கு சூலம் அடையாளம் பொறித்துள்ளனர். வைஷ்ணவ கோவில்களுக்கு சங்கு சக்கரம் பொறிப்பர்.இத்திருவாழிக்கல்லில் பூ போட்ட சக்கரம் மற்றும் சங்கு அடையாளம் நான்கு பக்கத்திலும் கோட்டோவியமாக பொறிக்கப்பட்டுள்ளன. பெருமாள் திருமொழியில் குலசேகரஆழ்வார் பாடிய பெருமாளின் பெயர் உய்யவந்தபெருமாள். அவர் பாடிய பெருமாளின் இருப்பிடம் வித்துவக்கோடாக இருப்பினும், இங்கு ஒய்யவந்தான் எல்லை பகுதியிலேயே வைஷ்ணவ திருவாழிக்கல் அமைந்துள்ளதால், ஊர் பெயரும் ஒய்யவந்தான் என அழைக்கின்றனர்.இங்கு வைஷ்ணவம் தழைத்தோங்கி இருந்திருக்கும். இங்கிருந்து 4 கி.மீ., துாரத்தில் கல்லத்தியில் செம்புராங்கல்லால் கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த பெருமாள் கோவில் இருப்பது வரலாற்று ஆதாரம். இதுபோன்று தொன்மையான ஆதாரத்தை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு, வரலாற்று பெருமையை எடுத்து செல்வது தொல்லியல் துறையின் கடமையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.