4,432 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திரவம்; 22ம் தேதி வரை 168 இடங்களில் முகாம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில், 168 இடங்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 4,432 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது: வைட்டமின் ஏ என்பது, உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து. இது ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும், நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல் திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து. இதில் குறைபாடு இருந்தால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும்.இதை கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ திரவம், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இம்முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 22ம் தேதி வரை புதன் கிழமை நீங்கலாக நடக்க உள்ளது. அதன்படி, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகதாரநிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் என 168 இடங்களில் இம்முகாம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 4,432 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.