உள்ளூர் செய்திகள்

632 பள்ளி பஸ்கள் தகுதி சான்று ஒரு வாரத்துக்குள் பெற அட்வைஸ்

திருப்பூர் : தனியார் பள்ளி பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெற்ற பின் இயக்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், 1,873 பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 632 வாகனங்கள் பழுது காரணமாக தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சரிசெய்து, தகுதிச்சான்றிதழ் பெற பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் முழுதும் பள்ளி வாகன பரிசோதனை மே முதல் வாரத்தில் துவங்கியது. தாராபுரம், உடுமலை பகுதிகள் முதல் வாரமே முதல் சுற்று ஆய்வு துவங்கிய நிலையில், திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம் பகுதி பள்ளி பஸ் பரிசோதனை, 15ம் தேதி நடந்தது. ஒரே நேரத்தில், 800க்கும் அதிகமான பஸ்கள் வந்ததால், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தடுமாறினர்.சீரான இடைவெளியில் அந்தந்த மைதானம் அல்லது அலுவலகங்களுக்கு பள்ளி பஸ்களை எடுத்து வந்து தகுதிச்சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி, அனுப்பி வைத்தனர்.கடந்த, 20ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள, 1,873 பள்ளி பஸ்களில், 1,241 பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 632 பஸ்கள் இன்னமும் சான்றிதழ் பெறவில்லை.அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம், பல்லடம், அவிநாசியை உள்ளடக்கிய திருப்பூர் வட்டார போக்குவரத்து துறையின் கீழ், 1,346 பள்ளி பஸ்கள் உள்ளது. இவற்றில், 1,241 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது; 632 பஸ்கள் இன்னமும் ஒப்புதல் வாங்கவில்லை.தாராபுரம், மூலனுார் வட்டாரத்தில், 260 பள்ளி பஸ்களில், 185 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது; 75 பஸ்கள் பெறவில்லை. உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், 267 பஸ்களில், 210 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெற்று விட்டன; 57 பஸ்கள் பெறவில்லை. பள்ளி திறப்புக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், பஸ்கள் பழுது நீக்கப்படாமல், உள்ளது.ஒரு வாரம் அவகாசம்மாவட்டத்தில், 632 பள்ளி பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறாத நிலையில், பழுது களை சரிசெய்து, வரும், 31ம் தேதிக்குள் இவை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பள்ளிகள் ஜூன், 2ல் திறக்கும் போது சான்றிதழ் பெறாத பஸ்கள் இயக்கத்துக்கு அனு மதிக்கப்பட மாட்டாது. மீறினால், பஸ்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பள்ளி நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.எனவே, ஒர்க் ஷாப், பழுது பார்ப்பு மையங்களில் உள்ள பஸ்களை விரைந்து சான்றிதழ் பெற ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் கொண்டு வர வேண்டும் என வட்டார போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்