சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பாடங்கள் நீக்கம்
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளி களுக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைக்கிறது.இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், பாடப் புத்தகங்களில் பல திருத்தங்களை செய்து புதிதாக வினியோகித்து வருகிறது. இதன்படி, ஏழாம் வகுப்புக்கு வினியோகிக்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் முற்றிலுமாக புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே இருந்த முகலாயர்கள் மற்றும் டில்லி சுல்தான்கள் பற்றிய பாடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.அதற்கு பதிலாக, மகதா, மவுரியா, ஷுங்காஸ், சதவாஹனா உள்ளிட்ட பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அதே புத்தகத்தில், ஒரு பூமி எப்படி புனிதமாகிறது' என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம் உள்ளிட்ட மதம் சார்ந்த புனித தலங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.அதில், 12 ஜோதிர்லிங்கம், சார்தாம் யாத்திரை, சக்தி பீடம், நதிகளின் சங்கமம், மலைகள், காடுகள் குறித்து இடம் பெற்றுள்ளன.மேலும், உ.பி.,யின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மஹா கும்பமேளா குறித்தும், மத்திய அரசின், மேக் இன் இந்தியா, பெண்களை காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் திட்டம், அடல் சுரங்கம் உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளன.