உள்ளூர் செய்திகள்

பீகாரில் 92 ஆயிரம் ஆசிரியர் நியமனம்

பாட்னா: பீகாரில் புதிதாக 92 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தற்போதுள்ள சட்ட நடைமுறைகளையும் மாற்ற பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து அமைச்சரவை செயலர் கிரிஷ் சங்கர் கூறியதாவது:முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 92 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. 80 ஆயிரம் தொடக்கக் கல்வி ஆசிரியர்களும், 12 ஆயிரம் நடுநிலை மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதுவரை கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பணி நியமனம் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி விண்ணப்பம் செய்பவர், படிப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகிய தகுதியின் அடிப்படையில் தீவிர சோதனை செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மற்றும் சர்வதேச அறிவியல்சார் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஐ.ஐ.டி., போன்ற தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு, ‘பீகார் கவுரவ் சம்மன்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு கிரிஷ் சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்