10ம் வகுப்பு: கணிதம், அறிவியல் பாடத்தில் கடினப் பகுதிகள் நீக்கம்!
இது உடனடியாக அமலுக்கு வருவதால், நீக்கப்பட்ட பாடங்கள் தவிர்த்து தான் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிருபர்களிடம் கூறியதாவது:தற்போது நடைமுறையில் உள்ள 10ம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடப் புத்தகங்களில் சில பாடப் பகுதிகள் மாணவர்கள் கற்பதற்குக் கடினமாக உள்ளதால், அவற்றை நீக்க வேண்டுமென மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 80 ஆக குறைந்ததற்கும், அதிகளவில் மாணவர்கள் தோல்வியடைந்ததற்கும் கணிதம், அறிவியல் பாடங்கள் தான் காரணம் எனத் தெரியவந்தது. அனைத்து மாவட்டங்களிலும் தோல்வியடைந்த மாணவர்கள், அதிகபட்சமாக இந்த இரு பாடங்களில் தான் தோல்வியடைந்திருந்தனர். பட்டப்படிப்பு பாடங்கள் 10ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்று இருந்தன. இதனால், அரசின் ஒப்புதல் பெற்று, கணிதம் மற்றும் அறிவியல் பாடப் புத்தகங்களில் கடினமான பகுதிகளை நீக்க, கடந்த செப்டம்பர் 17ம் தேதி குழுக்கள் அமைக்கப்பட்டன. பாடக்குழுத் தலைவர்கள், புத்தகம் எழுதிய நூல் ஆசிரியர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்களைப் பெற்று, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கடினமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்தது. இந்தப் பகுதிகளை நீக்குவதற்கு, இக்குழு அறிக்கை அளித்தது. முதல்வரிடம் இதுபற்றி தெரிவித்தபோது, மாணவர்களுக்குப் பயனளிக்கும் முடிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, கடினமான பகுதிகளை நீக்கி, அதை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், வரும் அரையிறுதி தேர்வு முதலே, நீக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து தான் கேள்விகள் கேட்கப்படும். பாடங்கள் நீக்கப்படுவதால் மாணவர்களின் தரம் பாதிக்கப்படாது. இதே மாணவர்கள், பள்ளிக் கல்வி முறையிலேயே மேல்நிலைக் கல்வியைக் கற்றப் பிறகு தான் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். மேல்நிலைக் கல்வியில், அவர்களுக்குத் தேவையான பாடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடுவதை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்கான பாடநூல்கள் அச்சிடும்போது, நீக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றிருக்காது. பிளஸ் 2 பாடங்கள் மற்றும் செய்முறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.