10ம் வகுப்பு மாணவர் பெயர் சரிபார்ப்பு பட்டியலில் புதிய சேர்க்கைகள்
மதுரை: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெயர் சரிபார்ப்பு பட்டியல் புதிய சேர்க்கைகளுடன், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வரும் மார்ச் / ஏப்ரல் மாதம் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எட்டு லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மாணவர்கள் பெயர் பட்டியலை பள்ளிகள், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்தன. தற்போது, அவை ஒருங்கிணைக்கப்பட்டு, சரிபார்ப்புக்காக பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர் உமா இதற்கான உத்தரவில் கூறியிருப்பதாவது:மாணவர் பெயர் சரிபார்ப்பு பட்டியலில் ஏற்படும் திருத்தம், நீக்கம் போன்ற விவரங்களை சரிபார்ப்பு பட்டியலிலேயே சிவப்பு மையால் குறிப்பிட வேண்டும். சேர்க்கை விவரம் இருந்தால், அதை தனிபடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் இவ்வாண்டு புதிதாக ஐந்து விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1-மாணவர்கள் சார்ந்திருக்கும் மதம், 2-ஊனமுற்றவரா, 3- கிராமம் அல்லது நகரத்தைச் சேர்ந்தவரா, 4- தனியார், அரசு, மாநகராட்சி போன்றவற்றில் எவ்வகை பள்ளி, 5- ஆண்கள் பள்ளியா, பெண்கள் பள்ளியா என விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. விவரங்களை சரிபார்த்து வரும் 26ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் பெயர், பிறந்த தேதியில் திருத்தம் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு. தேர்வு முடிவு வெளியானதும் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள கோரினால் அல்லது தேர்வு முடிவு வெளியிடுவதில் பிரச்னை இருந்தால் முழுப்பொறுப்பையும் தலைமை ஆசிரியரே ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.