10ம் வகுப்பு தனித்தேர்வு ஆக., 19ல் மதிப்பெண் பட்டியல்
ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளில் மூன்று பாடங்களுக்கும் குறைவாக தேர்ச்சி பெறத்தவறிய, மாணவ, மாணவியருக்காக சிறப்பு தனித்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான சிறப்பு தனித்தேர்வு கடந்த மாதம், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் மெட்ரிக் தேர்வு முடிவு கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி அந்தந்த பள்ளிகளின் வாயிலாக மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக்கொள்ளலாம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில், ப்ளஸ் 1ல் சேர விரும்புபவர்களுக்காக, ஆகஸ்ட் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்தவும் அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ப்ளஸ் 2 சிறப்பு தனித்தேர்வை போல், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் மெட்ரிக் தேர்விலும் மிகக்குறைந்த அளவு மாணவ, மாணவியரே தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுவதால், இச்சிறப்பு தனித்தேர்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.