108 புத்தக அரங்குகளில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை
திண்டுக்கல்: திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில், நவ.28, முதல் நேற்று வரை நடந்த, புத்தக திருவிழா நிறைவு பெற்றது. 108 புத்தக அரங்குகளில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகின. இதுகுறித்து இலக்கிய களத்தின் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், "பத்துநாட்கள் நடந்த புத்தக திருவிழாவில், ரூ.250க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு நூல் ஆர்வலர், ரூ.500க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு வாசிப்பு இமயம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு, வாசிப்பு செம்மல் என்ற சான்றிதழ்களையும் வழங்கி வருகிறோம். பத்து நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. அதன் மதிப்பு ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி பாடங்கள் பற்றிய எலக்ட்ரானிக் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் விற்பனை அரங்குகள் சேர்க்கப்படவில்லை. ரூ.250க்கும் குறைவாக புத்தகங்கள் வாங்கி சென்றவர்களை கணக்கு சேர்த்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் புத்தங்கள் விற்பனையாகி உள்ளன. இது வாசிப்பின் வட்டம் பெருகிவிட்டதையே காட்டுகிறது. இலக்கிய களம் அடுத்த கட்டத்தை தொட்டுவிட்டதை நாங்கள் உணர்கிறோம். வரும் ஆண்டுகளில் வாசிப்பின் சுகமறியும் புத்தக திருவிழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.