14 நாட்களாக திறக்கப்படாத அரசு துவக்கப்பள்ளி
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த உரிகம் பஞ்சாயத்தில், 14 நாட்களாக அரசு கன்னட துவக்கப்பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, உரிகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிலிக்கல் மலை கிராமத்தில், அரசு கன்னட துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த, 1955 ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பள்ளிக்கு, ஆசிரியர்கள் சரியாக வராத காரணத்தால், படிப்படியாக மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்க்க, ஆசிரியர்கள் போதிய முயற்சி செய்யாததாலும், ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்து செல்வதாலும், பள்ளி அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் இடைநின்ற மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பள்ளியில், மூன்று மாணவ, மாணவியர் படித்து வருவதாகவும், 6 பேர் படித்து வருவதாகவும் மாறுபட்ட தகவல் கூறப்படுகிறது. சரியான மாணவர் பதிவேடு இல்லை. கடந்த நவம்பர் மாதம், 9 ம் தேதி, பருவமழை தீவிரம் அடைந்ததால், மாவட்ட கலெக்டர் ராஜேஷ் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 13, 14, 16, 23 ஆகிய நான்கு நாள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிலிக்கல் அரசு கன்னட துவக்கப்பள்ளி மூடப்பட்டது. கடைசியாக, 22 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதாக கூறும் இப்பகுதிவாசிகள், கடந்த, 14 நாட்களாக பள்ளி திறக்கப்படவில்லை. இதனால், இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது குறித்து பிலிக்கல் பகுதிவாசிகள் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் தினமும் வேலூர் சென்று வரமுடியாது என்பதால், எங்கள் கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், இங்கு தங்குவதை நிறுத்திக் கொண்டார். அதனால், அவர் பள்ளிக்கு வருவதும் குறைந்து விட்டது. 14 நாட்களாக திறக்கப்படாத பள்ளி, இன்று (நேற்று) மதியம், 2.30 மணிக்கு தான் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு கூறுகையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.