1,800 முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: விரைவில் அறிவிப்பு
மேலும், இதற்கான விண்ணப்பங்கள், நவம்பர் 10முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் 900 முதுநிலை ஆசிரியரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 450 ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 450 பணியிடங்களை, நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்பிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 2013 - 14ம் கல்வியாண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடம் உட்பட மொத்தம் 1,800 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., ஓரிரு நாளில் வெளியிடும். போட்டித் தேர்வு, வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடக்கும். தேர்வு செய்யப்படுவோரை, அடுத்த கல்வியாண்டில் பணி நியமனம் செய்திட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. விண்ணப்ப விற்பனை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட போட்டித் தேர்விற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நவ., 10ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிவிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14, 2014-15) போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் அத்தேர்விற்கான விண்ணப்பங்கள் நவ.,10ம் தேதி காலை 10 மணி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். தேர்வுக் கட்டணம் 500 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி.,க்கு 250 ரூபாய். விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவ.,25 மாலை 5.30 மணி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.