உள்ளூர் செய்திகள்

199.25 கட்-ஆப் எடுத்தும் விரும்பிய இடம் கிடைக்காத மாணவி

அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத முடியாத ஈரோடு மாணவி, பிளஸ் 2 உடனடித் தேர்வெழுதி, 199.25 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்று, பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளார். தற்போது பி.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர்ந்துள்ள இம்மாணவி, ஓர் ஆண்டு காத்திருந்து, அடுத்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் இ.சி.இ., படிப்பில் சேர முடிவு செய்துள்ளார். பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கு பொறியியல் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த 25ம் தேதி வரை வழங்கப்பட்டன. இதில், ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 817 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பொறியியல் துணை கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி நடக்கிறது. மூன்று பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கின் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கு இந்த துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு 199.25 முதல் 102 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 484 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நண்பகல் 12 மணிக்கு 101.75 முதல் 71 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 333 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு துணை கவுன்சிலிங்கிற்கு, 199.25 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற ஈரோடு வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற மாணவி விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து, மாணவி மகாலட்சுமியின் தாயார் பூங்கோதை கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, எனது மகள் மகாலட்சுமிக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதால், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை எழுத முடியவில்லை. பிளஸ் 2 உடனடி தேர்வின்போது இப்பாடங்களுக்கான தேர்வு எழுதிய மகாலட்சுமி, இயற்பியல் பாடத்தில் 199, வேதியியல் பாடத்தில் 198 மதிப்பெண்களை பெற்றார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றிருந்ததால், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு 199.25 ‘கட்-ஆப்’ மதிப்பெண் கிடைத்தது. பிளஸ் 2வில் 1,156 மதிப்பெண் பெற்றிருந்தும், முதலில் நடந்த பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. பொறியியல் துணை கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்திலோ, முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளிலோ இடம் கிடைக்காது என்பதால், எனது மகள் மகாலட்சுமியை தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., கணித படிப்பில் சேர்த்துள்ளேன். மேலும் கணிப்பொறி பயிற்சியிலும் சேர்த்துள்ளேன். ஒரு ஆண்டு காத்திருந்து, அடுத்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கின்போது, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இ.சி.இ., படிப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு பூங்கோதை கூறினார். மாணவி மகாலட்சுமிக்கு அடுத்தபடியாக, 189.75 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற கார்த்திக் காமராஜ் என்ற மாணவனும், 189 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற வியோலா எஸ்தர் என்ற மாணவியும் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், முதல் 11 பேர் 180க்கும் மேல் ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்