2020ல் நிலவில் இந்தியர் கால் பதிப்பர்: ‘சந்திரயான்’ அண்ணாதுரை உறுதி
பொள்ளாச்சி: ‘சந்திரயான்-1’ விண்கல திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சந்திரன் பற்றிய ஆய்வுக்காக இந்தியா சார்பில் ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் மொத்தம் 11 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் அனைத்து சாதனங்களும் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படும். வரும் டிசம்பர் முதல், அனைத்து சாதனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு சாதனங்கள் வழியாக கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களை கொண்டும் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப கட்ட ஆய்வுகள் மட்டுமே நடக்கிறது. நிலவில் இருந்து எடுக்கப்படும் கனிம தாதுப்பொருட்களை கொண்டு ஆராய்ச்சி செய்யப்படும். நிலவின் தன்மை, தாதுக்களின் நிலை, நிலவின் ஈர்ப்பு விசை ஆய்வு செய்யப்படுகின்றன. இது நீண்ட கால ஆய்வு என்பதால் உடனடியாக கணக்கிட முடியாது. விண்கலத்தில் இருந்து எதிர்பார்த்தபடி, அனைத்து தகவல்களும் வந்து கொண்டுள்ளன. நிலவுக்கு வரும் 2015- 16ல் ஆளில்லா விண்கலம் அனுப்படும். வரும் 2018- 20ல் நிலவுக்கு செல்லும் விண்கலத்தில் ஆட்கள் அனுப்பப்படுவர். வரும் 2020ல் இந்தியர் நிலவில் கால்பதித்து ஆய்வு செய்வர். சந்திரன் குறித்து ஆய்வுக்காக இந்தியாவில் இருந்து தொடர்ந்து விண்கலங்கள் அனுப்பப்படவுள்ளன. இவ்வாறு, திட்ட இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்தார்.