‘3 அரசு கல்லூரிகளை தரம் உயர்த்த மாணவர்கள் ஆதரவு’
கோவை: “தமிழகத்தில் மூன்று அரசுக் கல்லூரிகளை பல்கலையாக மாற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என, அமைச்சர் பொன்முடி பேசினார். தமிழகத்தில் சென்னை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளை அரசு ஒருமை (யுனிட்டரி) பல்கலையாக மாற்ற உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுபோல் கும்பகோணம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் கல்லூரியை ஒன்றிணைத்து பல்கலையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அமைச்சர் பொன்முடி, மாநில கல்லூரி, ராணிமேரி கல்லூரி, கும்பகோணம் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், பல்கலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, தனியார் பல்கலையாக மாற்றுவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:அரசு கலைக்கல்லூரியை, அரசு ஒருமை பல்கலையாக மாற்றுவதால் மாணவர்களுக்கு நன்மை ஏற்படும். பல்கலை அந்தஸ்து பெற்றால் யு.ஜி.சி., மற்றும் மாநில அரசிடம் இருந்து அதிகளவு நிதியுதவி கிடைக்கும். கூடுதல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை துவக்க முடியும். ஒருகாலத்தில் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளை பல்கலையாக மாற்றுவதற்கு நாங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். ஆனால், இன்றைய சூழலில் உலகமயமாக்கல் கொள்கை நடைமுறையில் இருக்கும் போது, தனியார் கல்லூரிகளுக்கு நிகராக அரசு கலைக்கல்லூரிகளும் போட்டியிட வேண்டுமெனில் பல்கலையாக தரம் உயர்த்தப்படுவது அவசியம். எல்லா கல்லூரிகளையும் அரசு மட்டுமே நடத்த முடியாது. சீனா மற்றும் பிற மேலை நாடுகளுக்கு சென்று வந்தபின்பே ஒருமை பல்கலை அமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒருமை பல்கலை அமைக்க முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு கலைக்கல்லூரியை பல்கலையாக்குவதை எங்களது முடிவு என்று சொல்லவில்லை. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்த்தால் கண்டிப்பாக விட்டு கொடுப்போம். பல்கலை அந்தஸ்து பெற்ற பின், பல்கலை அல்லது அரசு ஆசிரியர்களாக இருப்பது ஆசிரியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு கல்லூரியை பல்கலையாக மாற்றுவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட போவதில்லை.கோவை அரசு கலைக்கல்லூரி, ஒரு அரசு பல்கலையாகவே செயல்படும்; இது ஆசிரியர்கள் நடத்தும் பல்கலை. சீனியர் ஆசிரியர்கள் துணைவேந்தர்களாக இருப்பர். அரசின் நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். சென்னை மாநில கல்லூரி, ராணிமேரி கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரிகளை, அரசு ஒருமை பல்கலையாக மாற்ற அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், கோவை அரசு கலைக்கல்லூரியை பல்கலையாக மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால் கவுன்சிலிங் முறை இருக்காது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.