30 மாணவர்களின் ஐ.ஐ.டி. தேர்வு முடிவு நிறுத்தம்
ஐ.ஐ.டி.க்கள் சேர்ந்து நடத்தும் நுழைவுத் தேர்வான ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. எழுதிய மாணவர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 30 மாணவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடைபெற்ற பாட்டின்டாவில் உள்ள கயானி ஜெயில் சிங் பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மைய நிர்வாகியும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் எவ்வதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. பான்டின்டா நுழைவுத் தேர்வு மையத்தில் சில மோசடிகள் நடைபெற்றிருப்பதாக ஐஐடி ரூர்கி குழுவினர் அளித்த புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும், தேர்வெழுத அதிக மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க 3 நபர் குழுவை ஐஐடி நிர்வாகம் நியமித்துள்ளது. ஜுன் மாதம் 5ஆம் தேதிக்குள் இவர்கள் புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மற்ற அனைத்து மாணவர்களது தேர்வு முடிவுகளும், திட்டமிட்டபடி மே 25ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வினை ஐஐடி கான்பூர், கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 1051 மையங்களில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.