எச்1பி விசா கட்டண விலக்கு அமெரிக்க அரசு விளக்கம்
நியூயார்க்: 'எச்-1பி' விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணமாக, 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.உலகம் முழுதும் இருந்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. இதை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.விசா வழங்குவது உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 2 லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்திஉள்ளார்.இந்த நிலையில், ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போருக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது.தற்போது, மாணவர் விசாக்கள், தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட அமெரிக்க விசாக்களை வைத்திருப்போர், எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த புதிய கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.